Thirvadirai Kali


திருவாதிரை திருநாள்

#ஆருத்ரா_தரிசனம்.....


சிவபெருமானுக்குகந்த

அருமையான களி /ஏழுகறி கூட்டு /அடை செய்முறை பார்போம்.


#திருவாதிரைக்களி....


#தேவையானபொருள்கள்....


பச்சரிசி - 2 கப் 


வெல்லம் - 400 கிராம் 


நெய் - கால் கப் 


முந்திரி - 10 


திராட்சை - 15 


தேங்காய் துருவல் - அரை கப் 


ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி 


#செய்முறை....


தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும். 


வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 


பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். 


ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும். 


பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும். 


தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும். 


வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும். 


மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும். 


வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும். 


வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும். 


திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.


#ஏழு_கறி_கூட்டு....


#தேவையானபொருட்கள்.....


உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு - ஒவ்வொன்றும் 100 கிராம். [தோலுரித்துக் கொள்ளவும்]


வாழைக்காய் - ஒரு பாதி; 

பூசணி, 

பரங்கிக்காய், ஒவ்வொன்றும் 

ஒரு சிறு பத்தை


அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சைப்பட்டாணி, சௌசௌ, காரட் --- 100 கிராம் ஒவ்வொன்றும்., 


மொச்சை முதலான சில கொட்டை வகைகள், வேர்க்கடலை, கொத்துக்கடலை (முதல் நாளே ஊறவைத்துக் கொள்ளவும்) (ஒவ்வொன்றும் 1/2 கைப்பிடியளவு)

கறிவேப்பிலை


துவரம் பருப்பு ---- 3 டேபிள்ஸ்பூன்

புளி ---- எலுமிச்சம் பழ அளவு.

சாம்பார் மிளகாய்ப் பொடி ---- 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்

உப்பு,


#அரைத்துக்கொள்ள....


தனியா 2 டேபிள்ஸ்பூன்,

கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்

வெந்தயம் -- 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் -- 8 - 10

தேங்காய் துருவியது --- 2 டேபிள்ஸ்பூன்


#செய்முறை.....


தேங்காய் தவிர மற்றவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.


எல்லா காய்களையும் மீடியம் சைஸில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.


புளியை நன்கு கரைத்து, உப்பு கொஞ்சம் போட்டு, அதில் காய்களை போட்டு வேக விடவும்.


சாம்பார் பொடி, மஞ்சள் தூள் போடவும். சுமார் 15 நிமிஷங்கள் வேகட்டும்.


காய்கள் வெந்தவுடன், அதில் வெந்த துவரம்பருப்பை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்க்கவும்.


உப்பு போடவும். கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.


5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.


எழுகறி கூட்டு தயார். 


திருவாதிரை நன்னாளில் களியோடு சேர்த்து சூடாக பரிமாறவும்.


#திருவாதிரை_அடை

 

#தேவையானபொருட்கள்.....


பச்சரிசி - 1/2 கிலோ,

வெல்லம் - 300 கிராம்,

ஏலக்காய் - 6,

கருப்பு எள் - 2 தேக்கரண்டி,

தண்ணீர் - 1/2 டம்ளர்,

தேங்காய் - 1/4 மூடி (விருப்பப்பட்டால்),

நெய் - சுடுவதற்கு (150 கிராம் அளவு).


#செய்முறை.....


பச்சரியை கழுவி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு தண்னீர் வடித்து ஒரு துணியில் உலர விட வேண்டும்.


கையில் ஒட்டாத பதம் உலர்ந்ததும், மிக்ஸியில் போட்டு அரைத்து நைஸ் ரவை பதத்திற்கு சலித்து மாவு தயாரிக்கவும்.


தயாரித்த மாவை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும்.

எள்ளை கழுவி, கல் அரித்து வெறும் வாணலியில் போட்டு பொரியும் வரை வறுத்து மாவில் சேர்க்கவும்.


ஏலக்காயை பொடித்து மாவில் சேர்க்கவும்.

தேங்காய் சேர்ப்பவர்கள், தேங்காயை துருவி, சிவக்க வறுத்து மாவில் சேர்க்கவும்.


வெல்லத்தை பொடித்து, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, திரும்ப அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

பாகு கொதித்ததும் (ரொம்ப காய்ச்ச கூடாது. 


சளசளன்னு கொதிக்கும் போது எடுக்கணும்) இறக்கி மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.

சிறிது சூடு ஆறியதும், கையில் நெய் தொட்டுக் கொண்டு மாவை நன்கு பிசைந்து, (சப்பாத்தி மாவு போல்) எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.


வாழை இலையில் அல்லது பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டைகளை வட்டமாக தட்டவும்.


தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மூன்று, நான்கு அடைகளாக போட்டு சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

இரண்டு, மூன்று நாட்களுக்கு கூட கெடாமல் இருக்கும்.

Comments

Popular posts from this blog

ஸ்நான பௌடர்

Venn Pongal